சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இன்று அகற்றப்பட்ட நிலையில், உள்ளே சென்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் தரப்பினர் கடந்த 11ந்தேதி புகுந்து சூறையாடியுள்ள அலங்கோல காட்சிகளை கண்டு மனம் நொந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் முன்னிலையில், அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்த உள்ளே சென்றதுடன், அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இதை காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கட்சி அலுவலகத் துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிமுக அலுவலகத்துக்கு வைத்த சீலை அகற்ற உத்தரவிட்டதுடன், அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இன்று அதிகாரிகள் சீலை அகற்றினர். இதைத்தொடர்ந்து உள்ளே நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகம் முழுவதும் சூறையாடப்பட்டு உள்ள துடன் பல ஆவணங்களை மற்றும் ஜெயலலிதாவின் சிலை மற்றும் அவருக்கு வழங்கிய செங்கோலை காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கட்சி அலுவலகத்தின் 2வது தளத்தில் இருந்த விலை உயர்ந்த வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இபிஎஸ் தரப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக அலுவலகத்தில் உள்ள பீரோ மற்றும் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவைகள் உடைக்கப்பட்டு இருந்தன. மேலும் அங்கு ஆவணங்கள் உள்ளிட்டவைகள் சிதறி கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தின் 2வது தளத்தில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், செங்கோல் மற்றும் வெள்ளி உள்ளிட்டவைகளை காணவில்லை. இது அதிமுக தொண்டர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.