டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா இன்று பாராளுமன்ற செயலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய துணை குடியரசு தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 19-ஆம் தேதி (இன்று) வரை நடைபெற உள்ள நிலையில், நாளை (ஜூலை 20-ஆம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணியியான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் அறிவிக்கப் பட்டுள்ளார். அவர் நேற்று (18ந்தேதி) பிரதமர் மோடி முன்னிலையில்வ வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா, எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனையின் சஞ்சய் ரெளத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.