நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
“திமிர்” பிடித்த பள்ளிகளுக்கு..
ஒரு குழந்தை என்பது பெற்றெடுத்த அப்பா அம்மா மட்டுமின்றி தாத்தா பாட்டி சித்தப்பா மாமா என அத்தனை உறவு முறைகளுக்கும், வெறும் இன்னொரு ஜீவன் அல்ல. அளவற்ற பாசத்தால் ஏகப்பட்ட கனவுகளால் கட்டப்பட்ட ஒரு கோட்டை. வம்சத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வந்த குலவிளக்கு. அதனால்தான் ஒவ்வொரு குழந்தையின் மீதும் கணவனும் மனைவியும் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தைத்கூட குறைத்துக் கொண்டு சதா குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கின்றனர்.
பொருளாதார ரீதியாக தங்கள் வாரிசு என்றைக்குமே தடுமாறாமல் புகழ் பெற்று வாழ்வதற்காகவும் தான் வீடு வாசல்களை சம்பாதிக்க மாடாய் உழைக்கின்றனர். இப்படிப்பட்ட குழந்தையைத்தான் ஏகப்பட்ட கனவுகளோடு கல்வி கற்பதற்காக செலவைப் பற்றியே கவலைப்படாமல் தங்கள் சக்தியைமீறி பணம் திரட்டி தனியார் பள்ளிக்கு அனுப்புகின்றனர். அப்படியானால் அந்த குழந்தையை . கவனமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த பள்ளிக்கு எவ்வளவு உள்ளது?
நீங்கள் மட்டுமா அனுப்புகிறீர்கள் நூற்றுக்கணக்கான பேர் அவர் குழந்தைகளை அனுப்புகின்றனர் என்று பள்ளி நிர்வாகம் அசட்டையாக பதில் சொல்லலாம். ஆயிரம் பேர் என்ன லட்சம் பேர் கூட படிக்கட்டும். ஒவ்வொரு விஷயத்திற்கும் பெற்றோர் பணம் கட்டுவதால் ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தையின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் மட்டுமே பொறுப்பு.
படிப்பைத் தாண்டி குழந்தைக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், தன் வீட்டுக் குழந்தையாக கருதி மட்டுமே செயல்பட வேண்டும். நிர்வாக ரீதி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அலட்சியம் காட்டக் கூடாது. பள்ளிக்கூடம் என்பது ஏதோ ஒரு ரகசிய இருப்பிடம் அல்ல. எங்கும் எப்போதும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் என பலரும் உலாவரும் ஒரு பகுதி. இதையும் தாண்டி கண்காணிப்பு கேமராக்கள். ஆகையால் பள்ளி வளாகத்தில் எங்கே எது நடந்தாலும், நேரடி மற்றும் மறைமுக சாட்சிகள் இல்லாமல் போகவே போகாது.
தொழில்நுட்பம் ஏகத்துக்கும் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் எதையுமே மறைக்க முடியாது என்பது படித்த இவர்களுக்கு நன்றாக தெரிய வேண்டும். இப்படி இருக்கும்போது பள்ளி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? ஒரு குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது வேறு வகையான ஆபத்து ஏற்பட்டால் மருத்துவர் அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவித்த கையோடு பெற்றோருக்கும் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
என்ன நடந்தது? என்ன நடக்கிறது?என்ன நடக்க வேண்டும்? என்ற மூன்று கட்டங்களிலும் பெற்றோருக்கு ஒரு சின்ன சந்தேகம் கூட வராத அளவுக்கு விளக்கம் அளித்து ஒத்துழைப்பு தந்து கொண்டே இருக்க வேண்டும். சம்பவத்தை முதலில் மறைக்கப் பார்ப்பது, பின்பு முடியாது என்று தெரிந்த பிறகு பல்வேறுவிதமான சால்ஜாப்புகள் சொல்லி பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பது, இதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணம். சொல்லிக்கொண்டே போனால் நிறைய போகும்.
எதையும் மறக்க முடியாத இந்த தொழில்நுட்ப காலத்திலும், பள்ளி நிர்வாகங்கள் எதையாவது மறைக்க முயன்றால் கண்டிப்பாக பிரச்சினை வெடிக்கும். பள்ளியைப் பொறுத்தவரை வேண்டுமானால் மாணவ-மாணவியர் என்பவர்கள் நூற்றுக்கணக்கானோர் என கணக்கில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொரும் அவரவர் குடும்பத்திற்கும் அவர்கள்தான் சொத்து, மொத்த வாழ்க்கை, எதிர்காலம், வம்ச விருட்சம். அதனால் பாதிக்கப்பட்டவர் ஏழையோ பணக்காரரோ, யாராக இருந்தாலும் இழப்பு குழந்தை தொடர்பானது என்பதால் பள்ளிகளை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிட மாட்டார்கள்.
இனியாவது பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள் தனியார் பள்ளிகளே..