சென்னை: மத்தியஅரசு அரிசி மூட்டைக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், அரிசி கடைகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்பட பள்ளி குழந்தைகள் எழுதும் பேனா, இங்க் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு வரி போடப்பட்டுள்ள மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. அரிசிக்கு5 சதவீதம் ஜிஎஸ்டி அமல்படுத்தினால் ஒரு கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுழ.
இந்த நிலையில், முக்கிய உணவுப்பொருளான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று அரிசி ஆலைகள், அரிசி வியாபாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடூபட்டு உள்ளனர். அகில இந்திய அளவில் இன்று வலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
சென்னையில் பிராட்வே கொத்தவால் சாவடி மார்க்கெட், மற்றும் கோயம்பேடு உணவு பொருள் அங்காடியில் உள்ள அரிசி கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டன. அரிசி ஆலைகள் அதிகம் உள்ள செங்குன்றம் உள்பட சுமார் 1000 அரிசி கடைகள் இன்று மூடப்பட்டு இருந்தன. இதனால் அரிசி வாங்க வந்த பொதுமக்கள் அரிசி கடைகள் மூடப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.