சென்னை: சென்னை மயிலாப்பூர் பஜார் ரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில், மாஸ்க் அணியாததற்காக, அபராதம் போட்ட, மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அந்த நகை கடைக்கு இன்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னையில் பொதுஇடங்கள், வணிக நிறுவனங்களில் முகக்கவசம் கட்டாயம் என மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாத நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படுகிறத.

இந்த நிலையில், மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதியில் இயங்கி வந்த சாந்தா கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள், உரிமையாளர், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். இதனை பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தி யுள்ளனர். மேலும், நகைக்கடையில் உடலின் வெப்பநிலையை அளவிடும் கருவியும் இல்லை. அதே போல வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கப்படாதது தெரிய வந்ததால் கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு கடை உரிமையாளர் சந்தோஷ் குமாரிடம் தெரிவித்து அபராதம் விதிக்க அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் சந்தோஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாததில் ஈடுப்பட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் மாநகராட்சி சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் முரளியின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். இதுதொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், மாநகராட்சி அதிகாரியை தாக்கிய நகைக்கடை உரிமையாளரை போலீசார்  கைது செய்தனர். இந்த நிலையில், அவரது கடையின் உரிமை புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடையின் உரிமம் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்திருந்ததும், உரிமம் புதுபிக்காமல் கடையை நடத்தி வந்ததாக கூறி, மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை அவரது கடைக்கு  சென்று காலவரையறையின்றி சீல் வைத்து சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.