சென்னை: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என ஒரு புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்த மக்களவை சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார். இதுஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான், பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என கூறப்பட்டிருந்தது எதிர்க்கட்சியினர் சரியாக படித்திருந்தால், இதுபோன்ற தவறான கருத்தை பரப்பியிருக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த சூழலில் மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகம் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில், சாதாரணப உபயோகப்படுத்தும் வார்த்தை களான, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், குரூரமானவர், கிரிமினல், ரவுடித்தனம் என ஏராளமான வார்த்தைகள் நாடாளுமன்ற விவாதத்தின்போது பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அன்றாடம் புழங்கும் இதுபோன்ற வார்த்தகளை பேசக்கூடாது என்றால், எப்படித்தான் பேசுவது என எதிர்க்கட்சியினர் மத்தியஅரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுக் களை கூறி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா விளக்கம் அளித்தார். அப்போது, நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை மட்டுமே மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. தற்போது எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை. இதற்கு முன்பும் இதுபோன்ற அன்பார்லிமென்டரி வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டு இருக்கிறது, நீக்கப்பட்ட சொற்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளோம். இது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்தார்.
மேலும், 1100 பக்கங்கள் கொண்ட இந்த அகராதியை அவர்கள் (எதிர்க்கட்சியினர்) படித்திருப்பார்களா? என்று கேள்வி எழுப்பியவர், படித்திருந்தால் இப்படி தவறான கருத்தை பரப்பியிருக்க மாட்டார்கள். இதற்கு முன்னர் 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இதுபோன்ற அகராதி வெளியிடப்பட்டது.
நீக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியால் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். இதுபோன்று கடந்த ஆட்சி காலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 2010இல் (காங்கிரஸ் ஆட்சி) இருந்து ஆண்டுதோறும் இணைதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்தவர், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. அதே நேரத்தில், அந்த வார்த்தைகள், அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நீக்குவது கிடையாது.
இவ்வாறு கூறினார்.