1
 
“பெண்ணிடம் ஆபாசமாக நடந்த அரசு பஸ் டிரைவருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்தால், அந்த பெண்ணின் குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை  சென்னையில் நடந்திருக்கிறது” என்று கொதித்துப்போய்ச் சொல்கிறார்கள்  பெரம்பூர்வாசிகள்.
அவர்கள் சொல்லும் விசயம் இதுதான்:
சென்னையை சேர்ந்த பிரமோ, (32). இவரது கணவர் வினோத், (30). தாய் சிவகாமி, (45). கணவரின் தங்கை இந்திராணி, (25). தம்பி ரமேஷ், (29) மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த செவ்வாய்கிழமை ( 23.02.2016) பெரம்பூர் பிருந்தா திரையரங்கிற்கு இரவு காட்சிக்கு சென்றனர்.
படம் முடிந்த பிறகு இரு மோட்டார் சைக்கிள்களில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அண்ணா நகர் பஸ் டெப்போ அருகே வந்தபோது கணவர் ஓட்டி வந்த பைக் காக்கி சீருடையுடன் ரோடில் குடிபோதையில் நின்ற ஒருவர் மீது மோதியது. இதை அறியாமல் பிரேமா, தாய், குழந்தைகளுடன் வேறு ஒரு பைக்கில் முன்னால் சென்றுவிட்டனர்.
பைக் மோதிய நபர் எம்டிசி டிரைவர் நரசிம்மன் என்பது தெரியவந்தது. டெப்போவில் இருந்து ஓடி வந்த சிலர் பைக்கில் வந்தர்வளை சரமாரியாக தாக்கவிட்டு, அவ்வழியாக வந்த ஒரு இரவு நேர பஸ்சில் ஏறி கோயம்பேடுக்கு சென்றுவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பிரேமா, மீண்டும் கோயம்பேடுக்கு சென்று, அங்கு அந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நரசிம்மன், பிரேமாவிடம் ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, அவரிடம் ஆபாசமாக நடந்துள்ளார். ஆக்ரோஷத்துடன் நரசிம்மன் தாக்கியதில்  பிரேமாவுக்கு மார்பில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் நரசிம்மனை, பிரேமா தனது செருப்பால் அடித்தார்.
இதையடுத்து பிரேமா மற்றும் அவரது குடும்பத்தினரை கோயம்பேடு போலீசாரிடம் எம்டிசி ஊழியர்கள் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் அதிகாலை 5 மணி வரை காத்திருக்க வைத்துவிட்டு, பின்னர் மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் எம்டிசி டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் 4 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேமா மற்றும் குடும்பத்தினரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இதையடுத்து பிரேமா, அவரது தாய், கணவர், தம்பி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து புதன்கிழமை மாலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்பபடுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் ஜாமின் பெற்று வெள்ளிக்கிழமை அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
தொழிற்சங்கங்களின்  அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 12 மணி நேரம் இரு போலீஸ் ஸ்டேஷன்களில் காத்திருந்ததோடு, இரு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது. செருப்பால் அடித்தது குற்றம் என்றால் பிரேமாவை மட்டும் தான் சிறையில் அடைத்திருக்க வேண்டும். அதை விடுத்து மற்றவர்களையும் சிறையில் அடைத்தது, தொழிற்சங்கத்தினர் கொடுத்த நிர்பந்தம் தான். தொழிலாளர்கள் நலனுக்காக உழைக்கும் அரசியல்வாதிகள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்!”  என்கின்றனர் அவர்கள்.
“போதையில் வந்து எங்கள் வண்டி மீதி விழுந்து, எங்களையும் தாக்கி, பிறகு எங்களையே சிறையில் தள்ள காரணமாகிவிட்டார்கள் போக்குவரத்து ஊழியர்கள் சிலர்.   இதற்கு போக்குவரத்து சங்கங்களும்  ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவிட்டன. போக்குவரத்து தொழிலாளர்களா? போதையில் ஆடும் ரவுடிகளா?” என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்கள் அந்த குடும்பத்தினர்.