சென்னை: அதிமுகவில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையில், ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக, பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் தடை கேட்டு நீதிமன்றங்களை நாடிய நிலையில், தடை விடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை பறிக்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் , துணைத் தலைவர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அதிமுகவினர் பொறுப்பில் உள்ளனர். அதிமுக பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை. பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் , தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத் தின் கடிதம் அவரது உதவியாளர் வாயிலாக தனக்கு கிடைத்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி குறித்து எடப்பாடி பழனிசாமிடமிருந்து எந்த விதமான கடிதமும் வரவில்லை. கடிதம் பரிசீலனையில் உள்ளது. கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கடிதம் தொடர்பாக சட்ட விதிப்படி விருப்பு வெறுப்பின்றி ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.
தொடர்ந்து பேசியவர், நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநரிடம் இருந்து இதுவரை சரியான பதில் இல்லை .குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை அவர் அனுப்பி இருக்கிறார் என நம்புகிறோம். சட்டமன்றம் மரபு படி தீர்மானத்திற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அது மக்களை புறக்கணிக்கும் செயலாக தான் கருதுகிறேன் என்றார்.