நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப நாட்களாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, மன்னார்குடியைச் சேர்ந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுரிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநரை பரிந்துரை செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் 3முறை தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதுபோல, மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, இன்று ஜெயலலிதா கார் ஓட்டுநர் குணசேகரன் என்பவரிடம் விபத்தில் மறைந்த கனகராஜ் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஜெ.விடம் சிறிது காலம் மட்டுமே கார் ஓட்டுநராக இருந்த குணசேகரன் சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள சேரம்குளத்தை சேர்ந்தவர். இவரிடம் கோவையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். குணசேகரன் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்துக்காக டிராவல்ஸிலும் கார் ஓட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.