சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டி உள்ளது. அதுபோல காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க 5வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதனால், அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளதால், உபரி நிர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருப்பதால், அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும், இன்று 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,129ஆக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே அளவிலான நீர் வரத்து தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.