சென்னை: எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை டெல்லியில் உள்ள அகில இந்திய தேர்தல் ஆணையத் தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். அப்போது, அதிமுக சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க வலியுறுத்தினார்.
அதிமுக பொதுக்குழு கடந்த 11ந்தேதி நடைபெற்றது. இதில், அதிமுகவின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் இன்று நேரில் சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு 2,428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்” என்றார்.