சென்னை: டெட் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வாக, டெட் தேர்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஏற்கனவே நடைபெற்ற டெட் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்னும் ஆசிரியர் பணி வழங்கப்படாமல் உள்ளது. அவர்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி, டெட் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் தகுதிக்கு தேர்ச்சி பெற்றவர்கள், அரசு பணியில் சேர வேண்டுமானால், இந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்படும் போட்டிதேர்வை எதிர்கொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
ஏற்கனவே டெட் தேர்வு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதால், தற்போதைய சூழலுக்கு ஏற்றபடி, அவர்கள் மீண்டும் போட்டிதேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த போட்டித்தேர்வானது முதன்முறையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.