பொன்னேரி: பொன்னேரி நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு திமுக பிரமுகர் ரூ.40 லட்சம் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், காலியாக உள்ள பதவிகளுக்கு வரும் 9ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல இடங்களுக்கு போட்டியின்றி பலர் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர். சில இடங்களில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பொன்னேரி நகராட்சி துணை தலைவர் பதவி 40 லட்ச ரூபாய் என ஏலம் கேட்கும் வகையில் திமுக ஒன்றிய செயலாளர் வார்டு உறுப்பினரின் சகோதரரிடம் பேரம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.
பேரூராட்சியாக இருந்த பொன்னேரியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்குள்ள 27 வார்டுகளில் திமுக 15 இடங்களை வென்றது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் 15 வாக்குகள் பெற்று நகரமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் துணை தலைவருக்கான தேர்வு நடந்தது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயகுமார் 15 வாக்குகள் பெற்று துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திமுகவைச் சேர்ந்த ஆசானபுதூர் சுகுமார் என்பவர் திமுக வார்டு கவுன்சிலரிடம் நகர் மன்ற துணைத் தலைவர் பதவிக்கு 40 லட்சம் வரை பேரம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் திமுக ஒன்றிய செயலாளர் சுகுமாரன் எட்டாவது வார்டில் வெற்றி பெற்ற மோகனா காந்தாராவ் என்பவரின் தம்பியிடம் ரூ.40லட்சம் பேரை பேசி ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டு மீதமுள்ள தொகையை தயார் செய்து கொள் எனவும் இதில் மாவட்ட செயலாளருக்கு 17 லட்சமும் மீதம் உள்ள தொகையை வார்டு நபர்களுக்கு தரவேண்டும் என 40 லட்சத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளும்படி வார்டு கவுன்சிலருக்கு கட்டளையிட்டு, பின்னர் நீ செலவு செய்த பணத்தை எப்பொழுது திருப்பி எடுப்பாய். ஆகவே இதனை ரெடி பண்ணி வைத்துக் கொண்டால் மட்டுமே திரும்ப எடுத்துக் கொள்ள முடியும் என பேசும் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மக்கள் நலனுக்காகவும், ஊரக பகுதிகளில், நகரப்புகுதிகள் முன்னேற்றம் அடையும், ஊராட்சி, நகராட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், கட்சியினரோ அதில் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் பதவிகளை ஏலம் விடுவதும், பேரம் பேசுவதும் தொடர்ந்து வருகிறது. இது திமுக ஆட்சிமீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆடியோ உதவி: நன்றி – கேப்டன் டிவி