சென்னை: ஜூலை 11ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றவும் தடையில்லை என்று நேற்று நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையின்போது தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுவிட்டாலோ, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலோ இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரை தலையிட முடியாது என திட்டவட்டமாக மறுத்து, ஜூன் 23ம் தேதி நடந்த நிகழ்வுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், ஜூலை 11ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் எங்களுக்கு நோட்டீஸ் வந்தது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.