அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் என்ற ஊரில் அமைந்துள்ளது.
சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்” தலமானது.
பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
நாவல் மரத்துக்கு “ஜம்பு” என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்” என பெயர் பெற்றார்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.
பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்” உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், “நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!” என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.
சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.
சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் “அகிலாண்டேஸ்வரி” என்றழைக்கப்படுகிறாள்.
அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.
ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.
மதுரையைப் போல, இத்தலத்திலும் சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான்.
இக்கோவிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.