மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால், மாநில ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. இதையடுத்து, அங்கு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற வருவதால், மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக மும்பை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பாஜக.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் உத்தவ்தாக்கரே அரசு கவிழும் சூழல் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சொந்தமான இடங்களில் சிவசேனா தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மாநிலத்தில், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.