சென்னை: வேலூர் சிஎம்சி இராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.6.2022) தலைமைச் செயலகத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இப்புதிய மருத்துவமனை வளாகம் 1500 படுக்கை வசதிகளுடன், அவசர சிகிச்சை மையம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 பிரத்யேக அறுவை சிகிச்சை அறைகள், கூடுதலாக 29 அறுவை சிகிச்சை அறைகள், 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சை மற்றும் ஆய்வகங்கள், 29 படுக்கை வசதிகளுடன் கூடிய எலும்பு- மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவுகள் கொண்டுள்ளது.
மேலும், முழுவசதி கொண்ட இரத்த சேமிப்பு மற்றும் இரத்த நன்கொடையாளர் மையம், 50 டயாலிசிஸ் படுக்கை வசதிகள், உயர்நிலை நோய் கண்டறியும் மற்றும் சிகிச்சைக்கான கதிரியக்கவியல் மற்றும் அதிநவீன ஆய்வகங்கள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், இவ்வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார விநியோகத்தில் முப்பது சதவிகித தேவையினை சோலார் பேனல்கள் மூலம் பூர்த்தி செய்யும் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், சி.எம்.சி. இயக்குநர் டாக்டர் ஜெ.வி. பீட்டர், இணை இயக்குநர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் ஆகியோரும், இராணிப்பேட்டை யிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன், இ.கா.ப., சி.எம்.சி. தலைவர்பார்கஸ் வார்ஜி, இணை இயக்குநர் ஜாய் ஜான் மேமன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.