நியூயார்க்: அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட பூர்வமானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியலமைப்பு உரிமைப்படி, கடந்த 50 ஆண்டுகளாக கருக்கலைப்பு பெண்களின் உரிமை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டுள்ளது.  இந்த தீர்ப்பு காரணமாக அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பான்மையான மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு உச்சநீதிமன்றம், அது தொடர்பான வழக்கில் கடந்த  1973-ம் ஆண்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு, மருத்துவமனைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு வசதிகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.

1992- ம் ஆண்டு நடந்த மற்றொரு வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.  பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், ’22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில்,  சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கிடையில், 15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கருக்கலைப்பு செய்வதற்கு மிஸ்ஸிசிப்பி மாகாணம் தடை விதித்து. இதை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், டாப்ஸ் மற்றும் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நீதிமன்ற அமர்வில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு உரிமைக்கு முடிவு காணும் வகையில், சித்தாந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில்,  “கருக்கலைப்புக்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை என்று நாங்கள் கருதுகிறோம்… மேலும் கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்ப வழங்கப்பட வேண்டும்” என்று  கூறி உள்ளது. தற்போதைய  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஏற்கனவேஅளித்த தமது சொந்த தீர்ப்புக்கு  எதிராக அமைந்துள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக. தேசிய அளவில் கருக்கலைப்பு உரிமையை சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. மற்றவை சில புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது என்றும்,  அமெரிக்கா மாகாணங்களில் பாதியாவது கருக்கலைப்புக்கு தடை விதிக்க ஏதுவாக புதிய சட்டம் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், கருத்தரிக்கும் வயதுடைய சுமார் 36 மில்லியன் பெண்கள் கருக்கலைப்புக்காக செல்ல முடியாத நிலையை இது ஏற்படுத்தும் என்று பிளாண்ட் பேரன்ட்ஹுட் என்ற கருக்கலைப்பு சேவை வழங்கும் சுகாதார அமைப்பு கூறுகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மற்றம், கருக்கலைப்பு உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஏழு மாகாணங்களின் ஜனநாயக கட்சியின் அட்டர்னி ஜெனரல்களுடன்  விவாதித்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்த உள்ளது.

முன்னதாக, கருக்கலைப்பு விவகாரம் 1980ம் ஆண்டு வாக்கில், மத ரீதியிலானதாக மாறியது. கருவுக்கு வாழ உரிமை உண்டு, அதை அழிக்கக்கூடாது என்றும் ஒருசாரார் வலியுறுத்தி வந்தனர். அதுபோல, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே கருத்து வேறுபாடுகளும் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.