சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளை 1,432 கோடியில் உலக தரத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஐரோப்பிய குழுவினர் சென்னை மேயர் மற்றும் மாநகர ஆணையரை சந்தித்து பேசியதுடன், பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரான்ஸை தளமாகக் கொண்ட AFD வங்கியின் முன்மொழியப்பட்ட நிதியுதவியுடன் மொத்தம் 231 மாநகராட்சிப் பள்ளிகள் அதிநவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நவீன மரச்சாமான்கள் மற்றும்  சிறந்த கட்டிடங்கள் ஆகியவற்றுடன் ஆடம்பரமான தோற்றத்தைப் பெறும்.

பிரான்ஸ் மேம்பாட்டு முகமை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் புதுப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும்  நிலைத்திருத்தலுக்கான நகர முதலீடடுகள் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியுடன் சென்னை சீர்மகு திட்டத்தின் கீழ் இணைந்து ரூ.95.25 கோடி மதிப்பில் சென்னை பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் தொடர்பாக, இந்தியா மற்றும்  பூடான் நாட்டிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் யூகோ அஸ்டுடோ தலைமையிலான  குழுவினர் தமிழகம் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பிரியாவை நேற்று சந்தித்தனர். அப்போது, இத்திட்டத்தின்  கீழ் சென்னைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள்  குறித்தும், இத்திட்டத்தை சென்னைப் பள்ளிகளில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு  செல்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னைப் பள்ளிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் கேட்டறிந்தனர்.

அப்போது, அவர்களுக்கு இது தொடர்பான விளக்கக்காட்சிகள் போட்டு காண்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 231 பள்ளிகள் 1,432 கோடியில் மாற்றப்படும் என்றும், ஏஜென்சிகளிடமிருந்து வருங்கால நிதி தேவைப்படலாம் என்றும் கார்ப்பரேஷன் கூறியது. மேலும் சென்னையின் வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் உதவி  புரிய தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், மாநகரப் பள்ளிகளை மாற்றும் கட்டம்-3 இன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் வகுப்புகள், மொழி ஆய்வகங்கள், STEM ஆய்வகங்கள், TABகள் மற்றும் கால்பந்து மைதானம் மற்றும் உட்புற விளையாட்டு வசதிகள் போன்ற விளையாட்டு உள்கட்டமைப்புகளுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மாற்றத்தைப் பெற கார்ப்பரேஷன் நம்புகிறது.

கற்பித்தல் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான நிதியையும் பரிந்துரைத்துள்ளது. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தபோது, ​​இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவின் தூதர் உகோ அஸ்டுடோ, மேயர் ஆர்.பிரியா மற்றும் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரை சந்தித்தார்.

இந்த பணிகள் முடிவடைந்தால் தனியார் பள்ளிகளில் கூட இல்லாத வசதிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருக்கும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும்,  அவர்களின் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன.

இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு, அரசு பள்ளி ஆசிரியர்கள் அந்ததந்த பகுதிகளில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் கல்வி முறை, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முயற்சியால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தது.

தற்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.50 லட்சம் மாணவர்கள் படிக்கும் கட்டமைப்புகள் உள்ளன. இதில், 88 ஆயிரம் முதல், 95 ஆயிரம் வரை என்ற சராசரி நிலையில் தான் மாணவர் சேர்க்கை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இந்த மாணவர் சேர்க்கை 1.15 லட்சமாக உயர்ந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு ஒரு லட்சத்தை தாண்டியது. இந்தாண்டு இதை மேலும் அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் உலக தரத்தில் நவீன முறையில் உட்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

இதற்காக முதற்கட்டமாக, ‘சிட்டிஸ்’ மற்றும் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தில் 50 பள்ளிகளை ‘மார்டன்’ பள்ளியாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று, மாநகராட்சி பள்ளிகள் அனைத்தையும் தரம் உயர்த்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்சாகம் அடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, உலகத் தரத்தில் வகுப்பறைகளை உருவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் ‘சிட்டிஸ்’ திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில், ₹95.25 கோடி மதிப்பில் 28 பள்ளிகள் ‘மார்டன்’ எனப்படும் நவீன வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி கழிவறைகள்,  ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள், சிறப்பு விளையாட்டு  பயிற்சிகள், ஸ்டெம் ஆய்வகங்கள் மற்றும் மொழி சார்ந்த ஆய்வகங்கள் அமைக்கும்  பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றை ஆய்வு செய்த ஐரோப்பிய அதிகாரிகள், இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர்களிடமும் கேட்டறிந்தனர். இதுகுறித்து கூறிய உகோ அஸ்டுடோ,  இந்தத் திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒரு செழுமையும் ஈடுபாடும் கொண்ட சூழலை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், அங்கு சோதனைக் கற்றல் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் தர்க்கரீதியான சிந்தனை வளர்க்கப்படுகிறது” என்று  கூறினார். இந்தப் பயணத்தின்போது சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டுத் தூதரக அதிகாரி லிஸ் டால்போட் பாரேவும் உடனிருந்தார்.