மும்பை:
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்த தொடரானது நடைபெற திட்டமிட்டபடி தற்போது மூன்று போட்டிகள் முடிந்து இத்தொடர் இறுதிகட்டத்தை நோக்கி சென்றுள்ளது. அதனைத்தொடர்ந்து இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வேளையில் அயர்லாந்து அணிக்கு எதிராகவும் இளம் வீரர்களை கொண்ட மற்றொரு இந்திய அணி டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் சில குறிப்பிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டி20 போட்டிகளுக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தற்போது கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் இந்த தொடர் முடிந்து இங்கிலாந்து செல்ல இருப்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இத்தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார். மேலும் இத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த பல வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர்.
புதிதாக இரண்டு வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் காயம் காரணமாக சமீபத்தில் இந்திய அணியில் இருந்து விலகி இருந்த சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்: 1) ஹார்திக் பாண்டியா (கேப்டன்), 2) புவனேஷ்வர் குமார் (து.கேப்டன்), 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) இஷான் கிஷன், 5) சூரியகுமார் யாதவ், 6) தீபக் ஹூடா, 7) வெங்கடேஷ் ஐயர், 8) அக்சர் படேல், 9) யுஸ்வேந்திர சாஹல், 10) ரவி பிஷ்னாய், 11) சஞ்சு சாம்சன், 12) ராகுல் திரிப்பாதி, 13) ஹர்ஷல் படேல், 14) ஆவேஷ் கான், 15) தினேஷ் கார்த்திக், 16) உம்ரான் மாலிக், 17) அர்ஷ்தீப் சிங்