டெல்லி: ஜூலை 1ந்தேதி முதல்  முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருவதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. மேலும் தட்கல் முறை ரயில் டிக்கெட் புக்கிங் மாற்றம் உள்பட  மேலும் ஏராளமான பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, ரயில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையும் ரத்து செய்யப்பட்டது. தற்போது, தொற்று கட்டுப்படுத்தப்பட்டு முழுமையான ரயில் போக்குவரத்து நடைபெற்ற வருவதால், மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஜூலை 1ந்தேதி முதல் முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1-7-2022 முதல் முதியோர்களுக்கான கட்டண சலுகை அமலுக்கு வருவதாகவும், அதன்படி,  60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதம் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்ட உள்ளது. அத்துடன் இந்த கட்டண சலுகையானது  ராஜ்தானி மற்றும் சதாப்தி உட்பட அனைத்து ரயில்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து உள்ளது.

அதுபோல தட்கல் முறையில் பயணச்சீட்டு பதிவு செய்யும் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தட்கல் டிக்கெட்டுகளின் விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏசியில் முன்பதிவு செய்பவர்களுக்கு  காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்படும், ஸ்லீப்பர் கோச் பயணிகளுக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரை முன்பதிவு செய்யப்படும்  தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திருப்பித் தரப்படும்

ரயில்வே நடத்தும் சுவிதா ரயில்களில் பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வசதி வழங்கப்படும். காத்திருப்பு பட்டியல் இனி இருக்காது. ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களில் காகிதமில்லா டிக்கெட் வசதி தொடங்கப்படுகிறது. இந்த வசதிக்குப் பிறகு, சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களில் காகித டிக்கெட்டுகள் கிடைக்காது, அதற்குப் பதிலாக டிக்கெட் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும்.

விரைவில் ரயில்வே டிக்கெட் வசதி வெவ்வேறு மொழிகளில் தொடங்கப்பட உள்ளது. இதுவரை, ரயில்வேயில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் டிக்கெட் கிடைக்கிறது, ஆனால் புதிய இணையதளத்தில் டிக்கெட்டுகளை வெவ்வேறு மொழிகளில் முன்பதிவு செய்யலாம்

ரயில்வேயில் கூட்ட நெரிசலுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், ஜூலை 1 முதல் சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.  ரயில்வே அமைச்சகம் ராஜதானி, சதாப்தி, தூரந்தோ மற்றும் மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுவிதா ரயில்களை இயக்கும்.

 பிரீமியம் ரயில்கள் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

சுவிதா ரயில்களில் டிக்கெட் திரும்பப் பெறும்போது 50% கட்டணம் திருப்பித் தரப்படும். இது தவிர, 2 ஆம் வகுப்பு ஏசியில் ரூ. 100, 3 ஆம் வகுப்பு ஏசியில் ரூ. 90, ஸ்லீப்பரில் ஒரு பயணிகளுக்கு ரூ. 60 கழிக்கப்படும்.

ஜூலை 1 முதல் பயன்பாட்டிற்கு வரும் புதிய கட்டணச் சலுகைகள்..

பிறரின் உதவியின்றி பயணம் செய்ய முடியாத மாற்றுத் திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு 2ஆம் வகுப்பு (ஜெனரல்), படுக்கை (ஸ்லீப்பர்), முதல் வகுப்பு, 3ஆம் வகுப்பு ஏசி, ஏசி இருக்கை ஆகியவற்றின்  டிக்கெட் கட்டணங்களிலிருந்து 75% சலுகை வழங்கப்படும். அதன்படி, முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட்களுக்கு 50% ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் 3&2 ஆம் வகுப்பு ஏசிகளில் 25% சலுகை வழங்கப்படும்.  மாதாந்திர மற்றும் காலாண்டு டிக்கெட் பாஸ்களுக்கு 50% சலுகை. மேலும், பாதுகாப்பிற்காக உடன் பயணிப்பவருக்கும் இதே சலுகைகள் பொருந்தும்

புற்றுநோய் உள்ளவர்களுக்கு  2 ஆம் வகுப்பு, முதல் வகுப்பு, ஏசி இருக்கை கட்டணங்களிலிருந்து 75 சதவீதமும் 1 & 2 ஏசி வகுப்புகளில் செல்ல  50 சதவீதம் சலுகை வழங்கப்படும். படுக்கை மற்றும் 3ஆம் வகுப்பு ஏசியில் இலவசமாக பயணிக்கலாம்.

இதயம் மற்றும் கிட்னி செயலிழப்பு சார்ந்த நோயாளிகளுக்கு 2 ஆம் வகுப்பு, படுக்கை வசதி,  முதல் வகுப்பு, 3 ஆம் வகுப்பு ஏசி மற்றும் ஏசி இருக்கையில்  75 சதவீதமும்  1 & 2 ஏசி வகுப்புகளில் செல்ல  50 சதவீதம் சலுகை வழங்கப்படும். பாதுகாப்பிற்காக உடன் பயணிப்பவரும் இச்சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீடு,  கல்விச் சுற்றுலாவிற்குச் செல்லும் பொதுப்பிரிவு  மாணவர்களுக்கு  2ஆம் வகுப்பு மற்றும் படுக்கை வகுப்பு கட்டணங்களிலிருந்து 50 சதவீதமும்  எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு அதே வகுப்புகளில் கட்டணத்திலிருந்து 75 சதவீதம் கழிவு வழங்கப்பட்டும் மேலும், மாணவிகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை, மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரையிலும் 2 ஆம் வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம்.

போர் மற்றும் தாக்குதல்களில் கணவர்களை இழந்த பெண்களுக்கு இரண்டாம் மற்றும் படுக்கை(ஸ்லீப்பர்) வகுப்புகளில் டிக்கெட் கட்டணங்களிலிருந்து 75% சலுகை வழங்கப்படும்

நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லும் கலைஞர்களுக்கு 2ஆம் வகுப்பு, ஸ்லீப்பர் கட்டணங்களிலிருந்து 75 சதவீதமும் முதல் வகுப்பு, ஏசி இருக்கை, 3 & 2 ஆம் வகுப்பு ஏசிகளில் 50% சலுகை வழங்கப்படும்.

மாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்களுக்கு இரண்டாம் மற்றும் படுக்கை வகுப்புகளில் 75 சதவீதமும், முதல் வகுப்பில் 50% சலுகையில் பயணிக்கலாம். மத்திய அளவிலான போட்டிகளில் பங்குபெறுவோருக்கு 2 ஆம் வகுப்பு, படுக்கை மற்றும் முதல் வகுப்பில் 75 சதவீதக் கழிவு கிடைக்கும்.

மத்திய மற்றும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகை நிருபர்கள் தங்களது பணியின் பொருட்டு அனைத்து விதமான வகுப்புகளிலும் 50% சலுகையில் பயணிக்கலாம். இந்தச் சலுகை ஒவ்வொரு நிதியாண்டிற்கும் இரண்டு முறை வழங்கப்படும்.

காவல்துறைப் பணிகளுக்காக குடியரசுத் தலைவரின் காவலர் விருதுகள் மற்றும் இந்தியக் காவலர் விருதுபெற்ற 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு அனைத்து வகுப்பிலும் 50 சதவீதமும், பெண்களுக்கு 60 சதவீதமும் சலுகை கிடைக்கும்.

நல்லாசிரியர் மற்றும் கல்வித்துறைக்காக குடியரசுத் தலைவரிடம் விருதுபெறும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் மற்றும் படுக்கை வகுப்புகளில் 50% சலுகை வழங்கப்படும்.

விவசாயம் மற்றும் தொழில்துறை சார்ந்த கண்காட்சிகளுக்குச் செல்லும் விவசாயிகளுக்கு 2ஆம் வகுப்பு மற்றும் படுக்கை வகுப்புக் கட்டணங்களிலிருந்து 25% சலுகை கிடைக்கும்.

இவ்வாறு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.