சென்னை: நீலகிரியை போன்று தமிழகம் முழுதும் காலி மது பாட்டில்களை அரசு ஏன் திரும்ப பெறுவதை அமலாக்க கூடாது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ள உயர்நீதி மன்றம் அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி குடிக்கும் குடிமகன்கள், எமிட்டி (காலி) பாட்டில்களை சாலையிலும், மலைப்பிரதேசங்களில், வீசிவிடுகின்றனர். இதனால் உடைந்து நொறுங்கி கிடக்கும் கண்ணாடிகளால், பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதுதொடர்பான வழக்கில், முதல்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில், மதுவிற்பனை செய்யப்படும் காலி பாட்டில்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகள் மற்றும் மலைவாசஸ்தலங்களில் ஏன் அமல்படுத்தக் கூடாது என்ற கேள்வியை முன்வைத்தனர். மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனை மேற்கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். தற்போதுதான் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.