சென்னை: தமிழகஅரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ம் வகுப்பு வரை  மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற புதிய நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும்  என்கிற  தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு அப்போயைத முதல்வர் ஜெயலலிதா 26 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல பகுதிகளில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், அதன் செயல்பாடுகள் சாதாரண பள்ளிகளைப்போலவே செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள மாதிரி பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், அதுபோன்ற மாதிரி பள்ளிகள் தமிழ்நாட்டிலும் தொடங்கப்படும் என கூறினார். அதைத்தொடர்ந்து,  கூடுதல் வசதிகளுடன் 25 மாதிரி பள்ளிகளை 150 கோடி ரூபாய் செலவில் துவங்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதையடுத்து, மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. வரும் கல்வி ஆண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரி பள்ளிகளில் 9முதல் 12ம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி பள்ளிகளில், பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற  9ம் வகுப்பு மாணவர் களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு எனப்படும்  TRUST தேர்வு, மதிப்பெண்ணும் 9ம்  வகுப்பு சேர்க்கைக்கு  8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு எனப்படும் NMMS தேர்வில் பெற்ற மதிப்பெண்ணும், 11ம்  வகுப்பு சேர்க்கைக்கு 10ம் வகுப்பு பயிலும் மாணவர் களுக்கான NTSEதேர்வு மதிப்பெண் மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை,.

இதற்கிடையில்,  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.