சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று துவக்கி வைத்துள்ளார். தொடர்ந்து, அறநிலையத்துறையின் முடிந்த திட்டங்களை துவக்கிவைத்து புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்பு பணிகளை இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 43.68 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, ரூ. 9.67 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பணிகளை திறந்து வைத்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் கடந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ல் தீ விபத்து ஏற்பட்டு மண்டபம் முழுவதும் சேதமடைந்தது. விபத்து ஏற்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சீரமைப்பு பணிக்கான டெண்டர் மீண்டும் மீண்டும் கோரப் பட்டும் இறுதி செய்யப்படாமல் இருந்ததால் கால தாமதமாகி வந்தது. மேலும், அதை சீரமைக்க, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள களரம்பள்ளி மலையடிவாரத்தில் இருந்து மண்டபத்திற்கு தேவையான கற்களை வெட்டி எடுக்க 6.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மதுரையில் கோவிலுக்கு சொந்தமான செங்குளம் எனும் இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், மண்டபத்தின் வடிவமைப்பு பணிகளுக்கு 11.70 கோடி ரூபாயும் நிதியாக ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று காலை 11 மணிக்கு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு ஓராண்டுக்குள் முடித்து, குடமுழுக்கு பணிகளை துவங்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.