நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட “யங் இந்தியா லிமிடெட்” என்ற நிறுவனம் 2010ம் ஆண்டு கையக்கப்படுத்தியது. இதில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 1,057 பங்குதாரர்களுடன் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் 50 லட்சம் ரூபாய்க்கு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் 2,000 கோடி ரூபாய் வரை ஆதாயம் அடைந்துள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய ஸ்வாமி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இதையடுத்து, பண மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை கீழ் 2014ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 2015ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது இந்நிலையில் இவ்வழக்கில் விசாரணைக்காக ஜூன் 13ந்தேதி நேரில் ஆஜராகுமாறு ஜூன் 1ம் தேதி அமலாக்கத்துறை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சம்மன் அனுப்பியது.
ஆனால், ஜூன் 2ம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் வீட்டிலே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதுடன், தொற்று பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என மருத்துவ சான்றிதழ்களுடன் மேலும் 3 வார கால அவகாசம் கோரி அமலாக்கத் துறைக்கு சோனியாகாந்தி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி இதை வழக்கில் 13ம் தேதி திங்கட்கிழமை அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி இன்று மாலை 4 மணிக்கு காணொனி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் போது, நாடு முழுவதும் எவ்வித போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாககூறப்படுகிறது.
இதனிடையே ராகுல்காந்தி நேரில் ஆஜராகும் போது, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இளைஞர் காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வரும் 13-ஆம் தேதி ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் அன்று தலைநகர் டில்லியில் அனைத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களும் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.