பாரிஸ்:
சர்வதேச பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாம்பியனான அவனி லெகாரா,பாரா ஷூட்டிங் உலகக் கோப்பையில் தங்கப் பதக்கத்தை வென்று மற்றொரு சாதனை படைத்துள்ளார்.பிரான்சின் சாட்டூரூக்ஸில் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.எச் 1 இல் 250.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றதுடன் உலக சாதனையையும் படைத்துள்ளார்.அவரது பயிற்சியாளர் மற்றும் துணைக்கு ஆரம்பத்தில் விசா மறுக்கப்பட்டதால்,போட்டியை இழக்கும் தருவாயில் இருந்த நிலையில்,இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தலையிட்ட பிறகு பிரச்சினை தீர்க்கப்பட்டது.இந்நிலையில், தற்போது லெகாரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக,20 வயதான லெகாரா துப்பாக்கி சுடும் போட்டியில் ஏற்கனவே தான் வைத்திருந்த 249.6 என்ற தனது சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.இதனால்,2024 பாரிசில் நடைபெறவுள்ள பாராலிம்பிக்கில் அவர் இடம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக,லெகாரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்: “மகளிர் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.எச் 1 இல் 250.6 புள்ளிகள் பெற்று உலக சாதனை மதிப்பெண்ணுடன் தங்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்ததில் பெருமைப்படுகிறேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் மிக்க நன்றி”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,இப்போட்டியில் போலந்தின் எமிலியா பாப்ஸ்கா 247.6 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும்,225.6 புள்ளிகளுடன் ஸ்வீடனின் அன்னா நார்மன் 3 வது இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.