டில்லி

பூமியின் வளங்களை வளர்ந்த நாடுகள் சுரண்டுவதாகப் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.  டில்லியில் இன்று ‘மண் பாதுகாப்போம் இயக்கம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது.  இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தனது உரையில்,

“இந்தியா சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எடுத்துள்ள முயற்சிகள் பன்முகத்தன்மை கொண்டவை.  பூமியின் வளங்களை உலகின் மிகப்பெரிய நாடுகள் மேலும் மேலும் சுரண்டுவது மட்டுமல்லாமல், அதிக கரியமில வாயுக்களையும் வெளியேற்றி வருகின்றன.

இந்தியாவில் இந்த ஆண்டு பட்ஜெட்டில், கங்கைக் கரையோர கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இயற்கை விவசாய நடைபாதையை உருவாக்கவும் முடிவு செய்துள்ளோம். இதனால் விவசாய நிலங்களை ரசாயனமற்றதாக மாற்ற முடியும்.

நம் நாட்டின் விவசாயிக்கு, தன்னுடைய மண்ணின் தரம் என்ன?, மண்ணில் என்ன குறைவு, எவ்வளவு குறைவு? போன்ற விபரங்கள் தெரியாமல் இருந்தது. இதை சரி செய்ய விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் மழைநீரைச் சேமிக்கவும், பாதுகாக்கவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

நடப்பு ஆண்டு மார்ச் மாதம் நாட்டிலுள்ள 13 முக்கிய நதிகளைப் பாதுகாக்கும் பிரசாரமும் தொடங்கியது.  இதனால் நீர் மாசுபாட்டைக் குறைக்கவும், நதிகளின் கரையோரங்களில் காடுகளை வளர்க்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் மண்ணைக் காக்க ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம்”

எனத் தெரிவித்துள்ளார்.