கோவை
கோவையில் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியரைத் தாக்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை நகரின் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருக்குக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவக விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் மோகனசுந்தரம் குடும்பத்தினருடன், சின்னியம்பாளையத்தில் ஸ்டேஷனரி கடை நடத்தி வந்தார்ர்.
கொரோனா தொற்று காலத்தில் போதிய வியாபாரம் இல்லாமல் அந்தக் கடை மூடப்பட்டதால், மோகனசுந்தரம் உணவு விநியோக நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இ இன்று ஹோப் காலேஜ் பகுதி உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் எடுத்துக் கொண்டு, புலியகுளம் சாலை நோக்கி மோகன சுந்தரம் சென்று கொண்டிருந்தார்.
அவர் பீளமேடு காவல் நிலையம் அருகே சென்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பள்ளி வேன், அவிநாசி சாலையிலிருந்து பன்மால் சாலையை நோக்கி திரும்பி முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியது. இதைக் கண்ட மோகனசுந்தரம், பள்ளி வேனை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் “ஏன் அலட்சியமாக வேனை ஓட்டுகிறீர்கள்” எனக் கேட்டுள்ளார். அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது.
சிக்னலில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ், என்ன நடந்தது என விசாரிக்காமல், சம்பவ இடத்துக்கு வந்து, உணவு விநியோக ஊழியர் மோகனசுந்தரத்தின் செல்போனை பிடுங்கி, அவரை சரமாரியாகக் கன்னத்தில் அறைந்தார். த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், போக்குவரத்து காவலர் அடிப்பதை வீடியோ எடுத்தனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவியது. தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவலர் சதீஷை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடம் மாற்றி உத்தரவிட்டுள்ளார். காவலர் சதீஷ் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.