அனகாபள்ளி
ஆந்திராவில் அமோனியா வாயு கசிவால்200 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் போரஸ் என்ற ரசாயன ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகே பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வளாகத்தில் சீட்ஸ் அப்பேரல் இந்தியா என்ற மற்றொரு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
இங்கு 1,800 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரஸ் ஆய்வகத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இது அருகேயிருந்த நிறுவனத்திற்கும் பரவியுள்ளது. இதனால், சீட்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்த 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.
இதையொட்டி அச்சுதாபுரம் பகுதியில் உள்ள 2 மருத்துவமனைகள் மற்றும் என்.டி.ஆர். மருத்துவமனைக்கு உடனடியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது டில்லிக்குச் சென்றுள்ள முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சம்பவம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.மேலும் பாதிக்கப்பட்டோருக்குச் சிறந்த முறையில் சிகிச்சை வழங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன், சம்பவம் பற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.