திருச்சி
சசிகலாவை பாஜகவில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆனதில் இருந்து பல ஊகங்கள் எழுந்து வருகின்றன. அவர் பாஜகவில் இணைவார் என்பதும் அதில் ஒன்றாகும். எனினும் சசிகலா இதுவரை பாஜகவில் இணைய ஒரு சிறிய விருப்பம் கூட காட்டியதில்லை. அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த அவர் அன்று தொட்டு இன்று வரை அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று மட்டுமே கூறி வருகிறார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “சின்னம்மா (சசிகலா)வை அதிமுகவில் சேர்த்து விட்டால் அக்கட்சி இன்னும் வலுவாக இருக்கும். அவர் பாஜகவுக்கு வந்தாலும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். சின்னம்மாவின் வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அவரை அதிமுகவினர் சேர்க்காவிட்டால், பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்துக் கேட்டபோது, “சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால் இது தனி ஒரு மனிதன் முடிவெடுக்கக்கூடிய விஷயம் கிடையாது. இது தொடர்பாக டில்லியில் உள்ள தலைமைக் குழுவின் ஆலோசனைப்படியே முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.