ருள்மிகு மகாலிங்கேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அமைந்துள்ளது.

அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார். உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார். முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டுவிட்டு இறைவனையும் காணவேண்டும் என்று கூற, உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.

காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. “தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ” உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுவாராயினர் என்று தல வரலாறு கூறுகிறது.

தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 30 வது தலமாகும். தேவார பாடல் சிவத்தலங்கள் 274-ல் இத்தலம் 93-வது தலமாகும்.

இத்தல விநாயகர் ஈசனை பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் பெற்றது .

இத்தலத்தில் மகாலிங்க பெருமானுக்கு பூஜை நடந்த பிறகே விநாயகருக்கு பூஜை நடைபெறும். இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாகும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.

இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும், இத்தலத்தில் உள்ள அசுவ மேதத் திருச்சுற்றை (முதல் மதில் உட்புற சுற்று) வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனை பெறலாம். கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கைலாய மலையை வலம் செய்த பலனை பெறுவர்.

மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.