சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல, எங்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மற்றொரு குற்றவாளியான ரவிச்சந்திரன், தன்னையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 32 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது கடந்த சில மாதங்களாக பரோலில் விடுதலையாகி தூத்துக்குடி மாவட்டம் சூரப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

இவர், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, தான் உள்பட மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவரது கடிதத்தில், 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், தங்களின் உத்தரவின் பேரில் சிறை விடுப்பில் இருந்து வருவதாகவும், இதனால் உடல் நலம் குன்றிய தனது வயதான தாயாரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடிவதாகவும், தனது உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது போல், தான் உட்பட 6 பேரையும் முதலமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் எனவும் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.