சென்னை: தமிழக பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
இதுகுறித்து கூறிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் வழங்குவற்காக, திருத்தப்பட்ட பாடப்புத்த கங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில், உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கும், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முழு புத்தகம் என 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100 அடி வேளச்சேரி – தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம் ஆகிய இடங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.