டெல்லி: காற்று மாசு பரவலை தடுக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, இன்று 150 மின்சார பேருந்துகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ள நிலையில், இந்த பேருந்துகளில் 3 நாட்களுக்கு மக்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே டீசல் வாகனம் மற்றும் 15ஆண்டுகளை கடந்த வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து மின்சார வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று பொதுமக்கள் வசதிக்காக டெல்லியில் 150 மின்சார பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஐபி எக்ஸ்டென்ஷன் பஸ் டெப்போவில் 150 மின்சார பஸ்களை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர்
கைலாஷ் கெஹ்லோட் உடன் முதல்வரும் மின்சார பேருந்தில் ராஜ்காட் வரை சென்றார்.
இந்த பேருந்துகளில் அடுத்த 3 நாட்களுக்கு பொதுமக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் டெல்லி போக்குவரத்து துறைக்கு சொந்தமான டிப்போக்களில் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.