ஜார்கிராம்

த்திய பாஜக ஆட்சியை துக்ளக் ஆட்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே மோதல் மிகவும் வலுவடைந்து வருகிறது.    பாஜக மேற்கு வங்க அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.  அவ்வகையில் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் நடந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரை ஆற்றினார்.  அவர் தனது உரையில், “மத்தியில் அரசு புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது.  பாஜகவினர் தங்களது துக்ளக் ஆட்சியால் திரிணமூல் காங்கிரஸைத் தடுத்து நிறுத்திட முடியும் என்று நம்பினால் அது தவறு ஆகும்.  ஏனெனில் நாங்கள் மிகவும் வலிமையாக உள்ளோம்.

பாஜக மேற்கு வங்கத்தில் அடைந்த படு தோல்விக்குப் பின்னரும் வெட்கப்படவில்லை.  மாறாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி பற்றிக் கவலைப்படுகிறார்கள்.   ஆகவே இங்கு வன்முறை நடக்கிறது என்று பாஜகவினர் பொய் சொல்லி வருகிறார்கள்.   இந்த பெரிய மாநிலத்தில் சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.  ஆனால் அப்படி நடப்பதைக் கூட நாங்கள் விரும்பவில்லை.

மேற்கு வங்கத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   பாஜக ஆளும் மாநிலங்களில் அங்குள்ள மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.  மேற்கு வங்கத்தில் பணியாளர்கள் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதில், தவறு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  இதற்கு முந்தைய இடதுசாரிகளின் ஆட்சியில் துண்டு காகிதத்தில் பெயர் எழுதி வேலை வழங்கப்பட்டுள்ள முறைகேடுகளை விரைவில் வெளியிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.