பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் பாட புத்தகத்தில் இருந்த பெரியார் வரலாறு நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக அரசு அமைந்த பின் கர்நாடக மாநில பாட புத்தகங்களில் மாற்றம் செய்யும் நோக்கத்தில் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் பாடபுத்தகம் மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டது.  அந்த குழுவினர் தயாரித்துள்ள முதல் வகுப்பு தொடங்கி பத்தாம் வகுப்பிலான பாடப் புத்தகத்தில் திப்புசுல்தான் குறித்த வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது.  அது மட்டுமின்றி, பகத்சிங் உள்ளிட்ட சில சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டது.

இதைப் போல் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் வரலாற்றுப் பிரிவின் 5வது பாகத்தில் சமூகம், சீர்திருத்தம், ஆன்மிகம் உள்ளிட்ட சேவையில் ஈட்டுப்பட்டுள்ளவர்கள் குறித்து இடம் பெற்றிருந்தது. இதில் பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம், சத்திய சோதனை சமாஜம், ராமகிருஷ்ண மிஷன், நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம், வங்காள புரட்சி, பிரார்த்தனை சமூகத்தின் மாற்றங்கள், அலிகாட் போராட்டம், தியாசபிக்கல் புரட்சி, சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் ஆகிய பாடங்கள் இடம் பெற்றிருந்தது.

தற்போது நாராயண குரு, தந்தை பெரியார் ஆகியோர் வரலாறுகள் நீக்கப்பட்டதுடன் 11 பக்கங்களில் இருந்த மேற்கண்ட வரலாற்றை 6 பக்கங்களாகச் சுருக்கி உள்ளனர்.  இவ்வாறு பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் நாராயண குரு, தந்தை பெரியார் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது மாற்றம் செய்துள்ள பாடப் புத்தகங்களைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து, கல்வி நிபுணர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள் கொண்ட குழு அமைத்துப் பாடத் திட்டம் உருவாக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.