சென்னை: சென்னையில் ஹெல்மெட் அணியாததால் கடந்த 5மாதங்களில் 98 பேர் பலியாகி இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் பலர் இன்றுவரை ஹெல்மெட் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வாகன விபத்தின்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால், நீதிமன்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி 98 பேர் பலி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், நடப்பாண்டில் இருசக்கர வாகனங்களில் மூலம் எற்பட்ட விபத்து காரணமாக, 01.01.2022 முதல் 15.05.2022 வரையில் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணிந்து பயணித்ததில் 80 இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர். 714 இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவத்து உள்ளது.
கடந்த ஆண்டு (2021) நடந்த விபத்துகளை ஆய்வு செய்த போது, சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 611 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,294 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,929 இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மீறினால், வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.