டோராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதர்நாத், பத்ரிநாத் சிவன் கோவில்கள் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கோயிலுக்கு சர்தம் யாத்திரை சென்ற   28 யாத்ரீகர்கள் கடந்த  10 நாட்களில் உயிரிழந்துள்ளனர் என உத்தரகாண்ட் மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.  சர்தம் யாத்திரையின்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாநிலத்தின் சார்பில் பேரிடர் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத் சிவாலயங்கள் குளிர் காலம் முடிந்து 6 மாதங்களுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டு உள்ளன. மே 6ந்தேதி  கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்திரிநாத் கோவில் மே 8ந்தேதி அன்று திறக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளதால், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட கோயில்களுக்கு சர்தம் யாத்திரை சென்ற 28 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களில் பெரும்பாலும் இருதய கோளாறு, ரத்தக்கொதிப்பு ஆகிய பாதிப்பால் இறந்துள்ளதாகவும், இதையடுத்து, அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாக  மாநில அரசு தெரிவித்து உள்ளது.

தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரையில் பங்கேற்பதால், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநில அரசு தலை யிட வேண்டி இருப்பதாக கூறிய மாநில தலைமைச்செயலாளர், உயிரிழப்புகளை தடுக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது டன், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், இதுவரை இறந்த 28 யாத்திரிகர்களில்,  30 முதல் 40 வயதுடையவர்கள் 3 பேர் என்றும், 40 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்குட்பட்ட 4 யாத்ரீகர்கள், 50 முதல் 60 வயது வரையிலான எட்டு பேர்,  அதேசமயம் 76 வயதுக்குட்பட்ட 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான மரணங்கள் யமுனோத்ரி நடைபாதையில் நடந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.

பாத யாத்திரையின் போது உடல்நிலை பாதிக்கப்படுவோர் போதிய சிகிச்சை இல்லாமலே உயிரிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது குறித்து ஆலோசனை நடத்த உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது.