இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இருந்தபோதும், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த ராஜபக்சே தலைமையிலான அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில், கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி உள்ளிட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு தளர்த்தப்படும் வரை மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே கடந்த மாதம் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்தபோது உள்நாட்டு பாதுகாப்பு பணிக்கு ராணுவம் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சே சகோதரர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே பிரதமராக இருக்கும் மஹிந்த ராஜபக்சே-வை பதவி விலக கோரியதாகவும் இதற்கு மஹிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், கொழும்பு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது இலங்கை விவகாரம் குறித்து மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.