சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது என சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திரு.வி.க நகர் சட்டமன்றத்தில் உறுப்பினர் திரு.தாயகம் கவி, மேயர் பிரியா ராஜன், சென்னை1 மண்டல இணை ஆணையர் திரு.ந.தனபால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீலேகஸ்ரீசடகோப ராஜாமானுஜர் ஜீயர், திருக்கோயில் செயல் அலுவலர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,
சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் மேயர் வேண்டுகோளை ஏற்று பெரம்பூர் பகுதியில் உள்ள சேமாத்தம்மன் கோயிலினை ஆய்வு செய்ததாக கூறியவர், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சில ஆக்கிரமிப்புகள் உள்ளது. கோவில் திருக்குளம் வற்றி யுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், சென்னை சேமாத்தமன் கோயிலில் உள்ள குளத்தை 70 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர், அரசியல் ரீதியாக தமிழகத்தில் ஒளிமயமான ஆட்சி நடைபெற்று வருவாக தெரிவித்தவர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்ததால் அதனை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், 1000 ஏக்கர் அளவிற்கு நிலங்களை மீட்டெடுக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது என்றார்.
இந்த ஆண்டு 1500 கோயில்களுக்கு 1000 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.