சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பதவி ஏற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று காலை திடீரென 29சி பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்டறிந்தார்.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையடுத்து இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு மு.க. ஸ்டாலின் விரைந்தார் . அங்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அறிவாலயத்திற்கு செல்வதற்காக ராதாகிருஷ்ணன் சாலையில் அவரது கான்வாய் வாகனம் சென்றது. அப்போது ராதாகிருஷ்ணன் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்த சொன்ன முதல்வர் அங்கு வந்த பேருந்தில் திடீரென ஏறினார். அந்த வழியாக வந்துகொண்டிருந்த 29சி பேருந்தில் ஏறியவர், மக்களோடு மக்களாக பயணம் செய்தார். மேலும் இலவச பேருந்து திட்டம் குறித்த பெண் பயணிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். அப்போது பெண் பயணிகள் பேருந்துகள் குறைவாக வருவதாகவும், அதிக பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து பேருந்து நடத்துனரிடம் கேள்விகேட்டார். பெண்களுக்கு வழங்க கூடிய இலவச பேருந்து டிக்கெட் ஆகியவை குறித்து நடத்துநரிடம் கேட்டு அறிந்த அவர், அங்கிருந்த பயணிகளிடமும் உரையாற்றினார்.
சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 29சி பேருந்து பெரம்பூரில் இருந்து பெசன்ட் நகர் வரை இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.