அருள்மிகு ஒப்பிலியப்பன் (வேங்கடாசலபதி சுவாமி) திருக்கோவில், 108 திவ்யதேசத்தில் 16-வது திவ்யதேசமாகும். இந்த கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், துளசி வனமான இத்தலத்தில் வசித்து வந்தார். அவருக்கு “லட்சுமி தேவியை தனது மகளாகவும் நாராயணரை மருமகனாகவும் அடைய வேண்டும்” என்ற ஆவல் ஏற்பட்டது. இதற்காக அவர் இங்கு ஒரு திருத்துழாய் செடியின் அடியில் அமர்ந்து கடும் தவம் இருந்தார். அவரது தவத்தை கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள் லட்சுமியை நோக்கி தேவி நீ சென்று மார்க்கண்டேயருக்கு மகளாக இரு, தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன் என்றார். அதன்படி லட்சுமிதேவி சிறு குழந்தையாக பூமிதேவியாக அவதரித்து துளசி வனத்தை அடைந்தாள். மார்க்கண்டேயர் மனம் மகிழ்ந்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார்.
சில ஆண்டுகள் சென்றதும் பூமிதேவி பருவ மங்கையாக திகழ்ந்தாள். எல்லா வகையிலும் ஒத்த மணமகனை தேடி நின்றார். இந்நிலையில் “திருமால் முதியவராக தோன்றி பூமிதேவியை திருமணம் செய்து தர மார்க்கண்டேயரை வேண்ட, என் மகள் சிறுமியாதலால் உணவிலும், காய்கறிகளிலும் உப்பு சேர்க்கக் கூட தெரியாது” என்றும், முதியவரான உங்களை மணம் செய்ய மறுக்கிறாள் என்று மார்க்கண்டேயர் கூறி செய்வதறியாது தியானத்தில் எம்பெருமானை வேண்டினார். கண் விழித்ததும் அலங்கார திருமேனியுடன் எம்பெருமான் காட்சியளித்து உமக்கு வேண்டிய வரங்களை கேள் என்று கூற, மார்க்கண்டேயர் மூன்று வரங்களை கேட்டார்.
திருமாலும் இவ்வரங்களை அளித்து, வரும் அடியார்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மேலும் மகாவிஷ்ணு விண்ணுலகில் இருந்து இத்தலத்தை விரும்பி இங்கு வந்து தோன்றியதால் இத்தலம் திருவிண்ணகரம் என்றும், பூமிதேவி துளசிவனத்தில் அவதரித்ததால் துளசிவனம் என்றும், மார்க்கண்டேயர் தவம் இருந்து ஸ்ரீ பூமிதேவியை மகளாக பெற்று திருமாலுக்கு கன்னிகாதானம் செய்து வைத்ததால் மார்க்கண்டேயர் ஷேத்ரம் எனவும் போற்றப்படுகிறது.
இங்கு வேண்டிக்கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை.