சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் பொதுத்தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ள தமிழகஅரசு, இன்று பொதுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு வருகிற மே 5ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 10ஆம் வகுப்புகளுக்கு மே 6ஆம் தேதியிலும், 11ஆம் வகுப்புகளுக்கு மே 10ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளார். மேலும், தேர்வு மையங்கள், பறக்கும் படைகள் கண்காணிப்புகள் குறித்து கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும், தேர்வு கூடத்திற்கு மாணவ-மாணவிகள் எவ்வாறு வர வேண்டும், எவ்வாறு விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் செல்போனை தேர்வு மைத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஷூ, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அணிந்து வந்தால் கூட தேர்வு அறைக்கு வெளியே கழற்றி வைக்க வேண்டும். தேர்வு எழுதக் கூடிய மாணவ-மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்து வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.