சென்னை: ‘Foldable Number plate’ விற்பனை மற்றும் உபயோகப்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது சட்டவிதிகளுக்கு முரணானது என்று போக்குவரத்து காவல் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபகாலமாக பல இருச்கக்கர வாகனங்களில் மடக்கும் மற்றும் ஒட்டும் வகையிலான காந்த தன்மையிலான நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு வருகிறது. இது போக்குவரத்து சட்ட விதிகளுக்கு முரணானது. இதுபோன்ற சட்ட விதிகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட்டுகளை தயார் செய்து கொடுக்கும் நபர்கள், விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்படி, காவல் கூடுதல் ஆணையாளர், பெருநகர சென்னை காவல் போக்குவரத்து மற்றும் கணம் காவல் இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு மண்டலம்) ஆகியோரின் அறிவுரையின்படி, சென்னை நகரில் இருசக்கர வாகனங்களில் வாகனத்தின் பின்புறம் பொறுத்தப்படும் பதிவெண் கொண்ட பலகையினை (Number Plate) மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி வடிவமைக்காமல் குற்றமிழைக்கும் நோக்கத்துடன், பொதுமக்களுக்கு தெரியாத வகையில் மறையும் வண்ணம் (Foldable Type Number Plate) பொறுத்தி இயக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளையும், இது போன்ற பதிவெண் பலகையினை (Number Plate) தயார் செய்து விநியோகிக்கும் நபர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று (ஏப்.27) சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

புனித தோமையர் மலை (S-1) போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், புனித தோமையர் மலை, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள நியூ மெகா ஸ்டிக்கர் கடையில் சோதனை செய்த போது, அங்கு விற்பனைக்காக Foldable Number plate-களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் சரத்குமாரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் சரத்குமார் அளித்த தகவலின் பேரில் Foldable Number Plate களை தயார் செய்து கொடுத்த சுகுமாறன், என்பவரை இன்று (ஏப்.28) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 Foldable Number Plateகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாண்டிபஜார் (R-4) போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று (ஏப்.27) அண்ணாசாலை, கதீட்ரல் கார்டன் ரோடு, சென்னை பைக்கர்ஸ் ஸ்டிக்கர்ஸ் கடையில் சோதனை செய்த போது, அங்கு விற்பனைக்காக Foldable Number plate-களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் பிரவீன்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 Foldable Number Plate-கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் Foldable Number Plate-களை தயார் செய்து கொடுத்த ஜோஸ்வா என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதுவரை கைது செய்யப்பட்ட 3 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து, 32 Foldable Number Plateகளை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சிறப்பு சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட்டுகளை தயார் செய்து கொடுக்கும் நபர்கள் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.