சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து குறித்து இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பேசினார். அப்போது, வரும் காலங்களில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறைக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 10 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கட்டடத்தை பராமரிக்காததால் தீ விபத்து ஏற்பட்டது. அரசு மேற்கொண்ட அதி தீவிர பணி காரணமாக ஒரு உயிர் போன நிலை என்பது கூட இல்லை. இதுவே வேறு ஆட்சி, வேற முதலமைச்சராக இருந்திருந்தால், யாரும் கண்டுக்காமல் இருந்திருந்தால் 128 பேர் பலியாகியிருப்பார்கள். முதலமைச்சர் எடுத்த வேகமான நடவடிக்கையால் 128 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால், தீ விபத்து ஏற்பட்டபோது உயிர்சேதம் இல்லாமல் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவமனை கட்டங்களை கட்டியது திமுக தான், சுண்ணாம்பும் அடித்து திறந்து வைத்தது நீங்கள் என அதிமுகவை விமர்சித்தார். முழுமையாக 99% கட்டட பணிகளை முடித்ததுக்கு பிறகு ஒயிட் வாஸ், கலர் வாஸ் செய்து திறந்து வைத்தது அதிமுக என கூறிய அமைச்சர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை என்று பெயர் வைத்ததே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். எனவே, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விபத்து நடைப்பெற்ற கட்டிடத்தை இடித்துவிட்டு 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அறிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்காதது தான் மருத்துவமனையில் தீ விபத்து காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும்,105 வருடம் பழமையான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரிவித்ததுடன், தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.