சென்னை: தமிழக சட்டப்பேரவையில், நேற்று நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை தமிழகஅரசே நியமிக்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

இந்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும் , இணை வேந்தராக உயர்கல்வியும் துறை அமைச்சரும் இருப்பதால் கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அரசுக்கு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர் கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது பல்கலைகழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துவதோடு , மக்களாட்சிக்கு  எதிராக இருக்கிறது என்றார்.   இதையடுத்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் நேற்றே சபாநாயகர் அலுவலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டத்துறை மூலம் இன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக  ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.