டெல்லி: 100ஆண்டுகளை கடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி, மீண்டும் பழைய நிலைக்கு வர, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் முக்கிய பதவி கேட்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் திக்விஜய் சிங், பிரசாந்த் கிஷோர் கட்சியில் சேருவதற்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. இதையடுத்து கட்சியின் தலைமை மாற்றும் நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், குலாம்நபி ஆசாத் உள்பட 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இருந்தாலும், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தேர்தலில் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அசூர வளர்ச்சி பெற்று வருகிறது.

பாஜகவின் வளர்ச்சியை தடுத்து, ஆட்சியை கைப்பற்றும் வகையில், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி, அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று திமுக உள்பட பல எதிர்க் கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட மூத்த தலைவர்களுடன் கடந்த சில நாட்களாக தொடர் ஆலாசனை மேற்கொண்டார்.
அப்போது, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம், கட்சியை எப்படி மறு சீரமைக்கலாம் என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்துவருகிறார். கிஷோரின் திட்டம் குறித்து மதிப்பீடு செய்யும் குழுவை தவிர்த்து காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் முதல்வர்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நான்காவது முறையாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, கே. சி. வேணுகோபால், சோனியா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதன்படி, பிரசாந்த் கிஷோர் கட்சிகள் முக்கிய பதவி எதிர்பார்ப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி, ஆட்சியை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அறிக்கை ஒன்று சமர்ப்பித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ‘ பிரசாந்த் கிஷோருடன் எனக்கு மிக நெருக்கமான தொடர்பு உண்டு. .அவர் ஒரு அரசியல் ஆய்வாளர். அதனால் எந்த வகையான அரசியல் அர்ப்பணிப்பும் வெளிப்படையானது அல்ல. ஆனால் இப்போது அவர் உறுதியான ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அவர் காங்கிரஸில் இணைவதற்கு கட்சிக்குள் இருந்த எந்த எதிர்ப்பும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
100ஆண்டுகால காங்கிரஸ் கட்சியில் ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க தலைவர்கள் மூத்த தலைவர்கள் பலர் உள்ள நிலையில், அவர்களின் ஆலோசனையை பெறாமல், கட்சியை வழி நடத்த தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரரை நம்பியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.