சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கார் மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண் நீதிபதிக்கு சிறு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், லூப் சாலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மீன்கடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாகவே விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சென்னை சாந்தோம், பட்டினப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே லூப் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் குடும்பத்தினர், சாலையில் மீன்களை கொட்டி விற்பனை செய்வதால், காலை, மாலை என இருவேளைகளிலும் வாகனங்கள் போக்குவரத்துக்கு செல்ல முடியாதபடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் பல முறை எச்சரித்தும், ஆட்சியாளர்களின் வாக்கு வங்கி ஆசையால், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பது இல்லை.
இநத் நிலையில், இன்று காலை அந்த சாலையில் பவானி அம்மன் கோயில் அருகே, பெரிய வேகத்தடை ஒன்று உள்ளது. வேகத்தடை இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாததால், பட்டினப்பாக்கத்தில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வேகத்தடையை அறிந்தவுடன் மெதுவாக சென்றுள்ளது. இதனை கவனிக்காமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் காரி, சொகுசு காரின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால்,போலீசார் வருவதற்குள் விபத்தில் லேசான காயமடைந்த நீதிபதி மற்றும் ஓட்டுனர் மற்றொரு வாகனத்தில் அருகில் இருக்கும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுவிட்டனர். உயர்நீதிமன்ற நீதிபதி வாகனம் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த வழியாக உயர் நீதிமன்றம் செல்லும் நீதிபதிகள் பார்வையிட்டு விசாரித்துச் சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் போடப்பட்டுள்ளதால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.