அருள்மிகு ஏடகநாதர் கோயில் மதுரை மாவட்டம் திருவேங்கடத்தில் அமைந்துள்ளது.
மதுரையில் இருந்து வடக்கே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை ஆறு தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மன், பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் சிறப்பு மிக்க வழிபாட்டினைப் பெற்றுள்ளது.. பாண்டிய நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 4-வது தலமாகும். இத்திருக்கோயிலின் தல தீர்த்தமான பிரம தீர்த்தத்தில் நீராடி, திருஏடகநாதேஸ்வரரை வழிபட்டால் “சித்தப்பிரமை” நீங்கும் என்பது நம்பிக்கை. மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் (மதுரை-சோழவந்தான் சாலையில்) திருவேடகம் என்ற ஊர் உள்ளது.இவ்வூரின் புகழுக்குக் காரணம் இங்குள்ள ஏடகநாத சுவாமி கோவிலாகும். இது ஒரு சிறந்த சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். ஊரும் கோவிலும் வைகையாற்றின் கரையருகில் அமைந்துள்ளன. சமணர்களை ‘அனல்வாதத்தில்’ வென்ற திருஞான சம்பந்தர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு). பின் ‘புனல்வாதத்தில்’ ஈடுபட்டார். இப்போட்டியில் சமணர்கள் ஒரு சுலோகத்தை எழுதி அதை வைகை ஆற்றில் இட்டதாகவும், சமணரின் அவ்வேடு ஆற்றோடு போய்விட்டதாகவும், ஆனால் திருஞான சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றினை எதிர்த்துச்சென்று இன்றைய ஏடகப்பகுதியின்(திருவேடகம்) கரையில் அணைந்ததாகவும் இதனைக் கண்ட சமணர்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட தாகவும் கூறப்படுகிறது. சமணரை வென்ற திருஞான சம்பந்தர் ஏடணைந்த திருவேடகத்தில் சிவலிங்கம் ஒன்றை வைத்து வழிபட்டதாகவும், அதுவே இன்று திருவேடகம் கோவிலில் காட்சிதரும் ஏடகநாதர் என்றும் கூறுவர்.
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் பூசைகள் நடைபெறும் இத்தளத்தில் ஏடு எதிரேறிய விழா, பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது.