சென்னை: பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (12.4.2022) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில், பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை இணையதளம் வாயிலாக பெறும் வசதியை தொடங்கி வைத்தார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான உள் (போக்குவரத்து) துறை மானியக் கோரிக்கையில், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே நேரடி தொடர்பு இல்லாத (Contactless Service) போக்குவரத்து சேவைகளான பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பழகுநர் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுதல் ஆகியவற்றை பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே www.parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக சேவையை பெறும் வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம், மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடன், விரைவாக செயல்படுத்தப்படுவதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.